மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கி 300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் மே மாதம் வரை மழைக் காலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள கிண்ஷாசா பகுதியில் நேற்று முதல் பல மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டியதால் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மேலும் அங்குள்ள உயர்கல்வி நிறுவனமான தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தேவாலயங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பல பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 300 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சுமார் 47,750 வீடுகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் கடந்த மே மாதம் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த பேரிடர் நிகழ்ந்துள்ளது.
+ There are no comments
Add yours