போரால் உருக்குலைந்த காஸாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தைக் கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வேதனை தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது முழு பலத்தையும் பிரயோகித்ததில் அந்தப் பகுதியே நிலைக்குலைந்து போயுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் காஸாவில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. 4100 குழந்தைகள், 2640 பெண்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பிராந்தியமே குழந்தைகளின் மயானமாகிறது. உடனடியாகப் போரை நிறுத்துங்கள் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத்தில் நேற்று பேசிய டெட்ரோஸ் அதானோம், “எங்கும் யாரும் பாதுகாப்பாக இல்லை, காஸாவில் இருக்கும் 36 மருத்துவமனைகளில் பாதியிலும் அதன் முதன்முறை சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் மூன்றில் இரண்டும் செயல்படவில்லை என்றும் தற்போது இயங்குபவை. அவற்றின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருவதாகவும் கூறிய அவர், சுகாதாரப் பராமரிப்பு முறை இல்லை’’ என்றார்
தொடர்ந்து பேசிய அவர், “காயமடைந்தோர், உடல்நலம் குன்றியோர், இறக்கும் தருவாயில் உள்ளோரால் மருத்துவமனைகளின் பொதுத் தாழ்வாரங்கள் நிரம்பி வழிகின்றன. சவக்கிடங்குகளும் நிரம்பிவிட்டன. மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. போர் காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அடைக்கலம் நாடுகின்றனர்,” என்று டெட்ரோஸ் கூறினார்.
எத்தியோப்பியாவில் போர் சூழலில் தாம் வளர்ந்ததை நினைவுகூர்ந்த அவர், காஸாவில் சிறார்கள் சந்திக்கும் இன்னல்களை தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக கூறிய அவர், 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்’’ என்றார்.
+ There are no comments
Add yours