அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததாக கூகுள் நிறுவனத்திற்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீது கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, இதற்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டுள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்புக்கு நேட்டோ நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடர்ந்து பொருள் உதவியும், ராணுவ உதவியும் செய்து வருகின்றன.
இதனிடையே இது குறித்து பல்வேறு தகவல்களும் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் கூகுள் நிறுவனம் சார்பில் ரஷ்யா குறித்து தீவிரவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் இருந்ததாகவும், அதனை நீக்க கோரி ரஷ்யா கூகுள் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியிருந்ததாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால், இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் சரியாக பதில் அளிக்காததால், ஆல்பபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தகவலை அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு உள்ளடக்கம், தணிக்கை, தரவுகள் உள்ளிட்டவை தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷ்யா தொடர்ந்து முரண்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours