பாகிஸ்தானில் முல்லா மசூத் ரஹ்மான் உஸ்மானி கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கவுரி நகரில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மசூத் ரஹ்மான் உஸ்மானியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இத்தாக்குதலில் உஸ்மானி உயிரிழந்தார். அவரது ஓட்டுநர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் இஸ்லாமாபாத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருவதாகவும். விரைவிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றும் பாகிஸ்தான் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உஸ்மானி இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வந்தவர். சிபா – இ சஹாபா இயக்கம் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் அரசு அந்த இயக்கத்துக்கு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து சன்னி உலமா சபை உருவாக்கப்பட்டது. இந்தச் சபையின் துணை செயலராக உஸ்மானி பொறுப்பு வகித்து வந்தார்.
நேற்று முன்தினம் உஸ்மானியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலத்தில் ஷியா பிரிவினருக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
உஸ்மானியின் கொலைக்குக் காரணமானவர்களை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவரது இறுதி ஊர்வலத்தில் சன்னி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
+ There are no comments
Add yours