இந்தியாவின் தேசியக் கொடியை அவமதித்த வகையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியதால், மற்றுமொரு முறை பகிரங்க மன்னிப்பு கோரி இருக்கிறார் மாலத்தீவு முன்னாள் அமைச்சரான மரியம் ஷியுனா.
இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து பிரதமரையும் இந்தியர்களையும் சீண்டியதில் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர் இந்த மரியம் ஷியுனா. அந்த சர்ச்சை பெரிதாக வெடித்ததில், மரியா உட்பட மாலத்தீவின் அமைச்சர்களாக இருந்த மூவர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது இரண்டாவது முறையாக மரியம் ஷியுனா சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
மாலத்தீவு தேசத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அங்கேயும் ஆளும்கட்சி – எதிர்க்கட்சி இடையிலான அரசியல் லாவணிகள் அதிகரித்துள்ளன. அவற்றில் ஒன்றாக முன்னாள் அமைச்சர் மரியம், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் தொடர் பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிந்து வருகிறார்.
அவற்றில் ஒன்றாக ’மிகப்பெரும் சரிவை எதிர்கொண்டிருக்கும் எதிர்க்கட்சியிடம் மாலத்தீவு மக்கள் விழ விரும்பவில்லை’ என்ற பதிவில், மரியம் இணைத்திருந்த படம் சர்ச்சையை கிளப்பியது. அந்த பதிவில் இந்திய தேசியக்கொடியில் இடம்பெற்றிருக்கும் அசோக சக்கரத்தை மரியம் அவமதித்து இருப்பதாக, இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர் எடுத்து சொன்னதில் சமூக ஊடகவெளி பற்றிக்கொண்டது.
மரியம் ஷியுனாவுக்கு எதிராக இந்தியாவிலிருந்து கண்டனங்கள் அதிகரித்தன. ஏற்கனவே இந்திய பிரதமரை குறிவைத்த சமூக ஊடகப் பதிவுக்காக அமைச்சர் பதவியை இழந்திருக்கும் மரியம், மீண்டும் இந்திய சர்ச்சையில் விழுந்ததும் இம்முறை சுதாரித்துக்கொண்டார். இதையடுத்து அவர் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.
இதுகுறித்து மரியம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “எனது சமீபத்திய இடுகையின் உள்ளடக்கத்தால் ஏதேனும் குழப்பம் நேரிட்டிருப்பின் அதற்காக எனது மனப்பூர்வமான மன்னிப்பைக் கோருகிறேன். மாலத்தீவு எதிர்க்கட்சியான எம்டிபி-க்கு நான் அளித்த பதிலில் பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை ஒத்திருந்தது என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது முற்றிலும் தற்செயலானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தியாவுடன் உறவையும், நாம் பகிர்ந்து கொள்ளும் பரஸ்பர மரியாதையையும் மாலத்தீவு ஆழமாக மதிக்கிறது. எதிர்காலத்தில் நான் பகிரும் உள்ளடக்கத்தை சரிபார்ப்பதில் அதிக விழிப்புடன் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அவர் மன்னிப்பு கோரியபோதும், தொடர்ச்சியான அவரது சர்ச்சைப் பதிவுகளால் இருநாட்டு உறவுகள் சேதாரமாவதாக, மாலத்தீவு மக்கள் மத்தியிலும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார்.
+ There are no comments
Add yours