தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்தியர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று ஹமாஸ் குழு தலைவர்களுள் ஒருவரின் மகனான மொசாப் ஹசன் யூசுப் வலியுறுத்தியுள்ளார்.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 2500 பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லை வேலிகளை உடைத்துக்கொண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். அன்று இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸ் கூறியது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க தொடங்கியது. எனவே, இந்தப் போர் 26 நாட்களுக்குப் பிறகும் தொடர்கிறது. இப்போது வரை 1400 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இறந்துள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹமாஸ் குழு தலைவர்களுள் ஒருவரின் மகனான மொசாப் ஹசன் இந்திய செய்தி சேனலான டைம்ஸ் நவ்வின் நிர்வாக ஆசிரியர் பத்மஜா ஜோஷிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியர்கள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் நிற்க வேண்டும் என்று மொசாப் கூறினார். ஹமாஸுக்கு எதிராக இந்திய மக்கள் நிற்க வேண்டும் என்றும், ஹமாஸை ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், ஹமாஸ் நிறுவப்பட்டதில் இருந்து, இஸ்ரேல் அரசை அழிப்பதே என்ற ஒற்றை இலக்கை மனதில் கொண்டுள்ளது. ஹமாஸ் இஸ்ரேல் அரசை அழிக்க விரும்புகிறது என்பது இரகசியமல்ல.
இஸ்ரேலையோ அல்லது இஸ்ரேலின் இருப்பு உரிமையையோ அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். ஹமாஸின் நோக்கம் பாலஸ்தீனத்தை உருவாக்குவது அல்ல மாறாக இஸ்ரேலை அழிப்பதாகும் என கூறினார். அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் உலகமே ஆச்சரியப்படுவது ஏன் என்று தெரியவில்லை, இது ஒன்றும் புதிதல்ல என்றார். ஹமாஸ் பொதுமக்களைத் தாக்கும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அவர்கள் நெரிசலான பகுதிகளைத் தாக்குகிறார்கள். குறிப்பாக அவர்கள் ஜெப ஆலயங்கள், பேருந்துகள், சந்தைகள், மளிகைக் கடைகள், கடற்கரை கிளப்புகள், இரவு விடுதிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றைக் குறிவைக்கின்றனர்.
இந்தியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கிறிஸ்தவர்கள் இணைந்து வாழ்கிறார்கள், யூதர்கள் இணைந்து வாழ்கிறார்கள். அப்படியென்றால் எப்பொழுதும் இஸ்லாமியர்களிடம் இருந்து மட்டும் ஏன் இந்த வன்முறை வருகிறது..? நிச்சயமாக எல்லா இடங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால் அதைவிட பெரிய அளவில் இஸ்லாமியர்களிடம் இருந்து வருவதை நாம் பார்க்கிறோம் என்று கூறினார். அக்டோபர் 7 அன்று, 2,500 க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் தெற்கு இஸ்ரேலை தரை, வான் மற்றும் கடலில் இருந்து தாக்கினர். 1,400 பேரைக் கொன்றனர், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள். அதே நேரத்தில் 30 குழந்தைகள் உட்பட 230 பேரை ஹமாஸ் கடத்திச் சென்றது என்றார்.
மேலும் அந்தப் பேட்டியில் மொசாப் மகாத்மா காந்தியையும் புகழ்ந்துள்ளார். ஒரு தேசத்தை எப்படிக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார். மொசாப் ஹசன் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய இந்த சண்டை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இதற்கிடையில் பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலிய அல்லது வெளிநாட்டு குடிமக்களை விடுவிக்க ஹமாஸ் இன்னும் தயாராக இல்லை. வரும் நாட்களில் படிப்படியாக வெளிநாட்டு குடிமக்களை விடுவிக்கத் தொடங்கும் என்று ஹமாஸ் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours