தங்கள் நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த சுமார் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி கூறினார்
இது குறித்து இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4.82 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியா்கள் கடந்த 2 மாதங்களில் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டனா். அவா்களில் 90 சதவீதத்தினா் தாமாக முன்வந்து ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளனா்.
பாகிஸ்தானில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தும் உள்நாட்டு அரசியலில் பங்கேற்ற 10 ஆப்கன் நாட்டவா்களை அவா்களது தாயகத்துக்கு நாடு கடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் உள்நாட்டினா் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினா் ஈடுபட்டால் அவா்கள் உடனடியாக வெளியேற்றப்படுவாா்கள் என்றாா் அவா்.
கடந்த 1979-89-ல் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததிலிருந்தே அந்த நாட்டைச் சோந்த சுமாா் 17 லட்சம் அகதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது. இருந்தாலும், அண்மைக் காலமாக ஆப்கன் எல்லையையொட்டிய பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், இதில் ஆப்கன் அகதிகள் அதிக அளவில் பங்கேற்பதாகவும் பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
அதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா. அகதிகள் நல அமைப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமாா் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறியதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் தற்போது கூறியுள்ளாா்.
+ There are no comments
Add yours