பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி செலுத்தச் சென்ற மருத்துவக்குழுவுக்கு பாதுகாப்பு அளித்த 6 போலீஸார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் போலியோ தடுப்பூசி செலுத்துவதற்காக இன்று காலை அப்பகுதிக்கு மருத்துவக்குழு ஒன்று சென்றிருக்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக போலீஸ் குழு ஒன்று சென்றுள்ளது. (போலீஸாரை) குறிவைத்து மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் 6 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து போலீஸார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் எல்லையோர மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் உள்ள மாமுண்ட் தாலுகாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு குழுவோ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் தலிபான்கள் உட்பட மத தீவிரவாதிகள், கடந்த காலங்களில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணியாளர்களையும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவலர்களையும் கொன்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழ்நாள் முழுவதும் இயலாமையை ஏற்படுத்தக்கூடிய வைரஸான போலியோ தொடர்ந்து பரவி வருவதாக சொல்லப்படுகிறது.
+ There are no comments
Add yours