அண்டை தேசமான பாகிஸ்தானுக்கு அவசியமெனில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா உதவுவதற்கு தயார் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், பயங்கரவாதத்தை தடுக்க இந்தியா ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிவித்துள்ளார். எனினும் ”பயங்கரவாதத்தை முன்வைத்து இந்தியாவை நிலைகுலையச் செய்யவேண்டும் என்பது பாகிஸ்தானின் நோக்கமாக இருந்தால், அதற்கான விளைவுகளை பாகிஸ்தான் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
”இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்திவிட்டு, எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் தப்ப முயலும் பயங்கரவாதிகளை பின்தொடர்ந்து சென்று அழிப்போம்” என்று கடந்த வாரம்தான் பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஒரே வாரத்தில் பாகிஸ்தானுக்கான அடுத்த எச்சரிக்கையை ராஜ்நாத் சிங் பதிவு செய்திருக்கிறார். “பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு ஓடினால், அவர்களைக் கொல்ல பாகிஸ்தானுக்குள் நுழையவும் தயங்க மாட்டோம்” என்று அப்போது ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தனக்கு எதிரான பயங்கரவாதிகளை குறிவைத்து கொலைகளை இந்தியா நிகழ்த்துவதாக, பிரிட்டிஷ் நாளிதழான ’தி கார்டியன்’ செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் ராஜ்நாத் சிங்கின் பேச்சு அமைந்திருந்தது. 2019 பிப்ரவரியில் காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீதான தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானுக்குள் இதுவரை இந்தியா சுமார் 20 கொலைகளை நிகழ்த்தி இருப்பதாக கார்டியன் செய்திக் கட்டுரை இருந்தது.
மேலும், கார்டியன் நாளிதழின் அந்த செய்தியை, ’தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம்’ என்று இந்தியா நிராகரித்தது. முன்னதாக, கனடா, அமெரிக்காவில் எழுந்த இதே குற்றச்சாட்டுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்த கருத்தினை இந்திய அதிகாரிகள் மீண்டும் எதிரொலித்தனர். ‘வெளிநாட்டு மண்ணில் குறிவைத்து கொலைகளை அரங்கேற்றுவது இந்திய அரசாங்கத்தின் கொள்கை அல்ல’ என ஜெய்சங்கரின் அந்த கருத்து அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புல்வாமா தாக்குதல் நிகழ்ந்தபோதும், அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இப்போதைய கருத்தையே அப்போதும் பதிவு செய்திருந்தார். “பயங்கரவாதத்தை சமாளிக்கும் வலிமை இல்லை என பாகிஸ்தான் நினைத்தால் இந்தியாவின் உதவியை நாடலாம். இந்தியா தனது மண்ணிலிருந்து தாக்கும் வலிமையைக் காட்டியது போலவே, வேறு நாட்டின் மண்ணிலிருந்தும் அதனால் தாக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாகிஸ்தான், சீனா என எல்லைப் பிரச்சினைகள் குறித்து அதிகம் பேசுவதன் பின்னணியில், மக்களவைத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours