2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது பிரச்சனைகள், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் அளவுக்கு தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என ஒரு பாகிஸ்தான் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கன் எல்லையான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் ஒரு பள்ளி கட்டிடத்தில் தற்காலிக ராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த முகாமில் இன்று அதிகாலை ஒரு பயங்கரவாத கும்பல் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
இந்த தற்கொலை படை தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததாகவும் 27 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், உயிரிழப்புக்கள் மேலும் கூடும் என கூறப்படுகிறது. இருந்தும் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
உயிரிழந்தவர்களின் பலர் ராணுவ உடையில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர்கள் அனைவரும் இராணுவ வீரர்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தெஹ்ரீக்-இ-ஜிஹாத் பாகிஸ்தான் — பாகிஸ்தான் தலிபானுடன் இணைந்த ஒரு புதிய குழுவானது இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours