’பாரத் மார்ட்’வர்த்தக மாதிரியை அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

Spread the love

அமீரகத்தில் 2 நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அங்கே ’பார்த் மார்ட்’ என்ற இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பிரம்மாண்ட வணிக வளாகத்தையும் திறந்து வைக்கிறார்.

வளைகுடா நாடுகளுடன், பெட்ரோலிய பொருட்களுக்கு அப்பாலும் வணிக உறவினை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் ’பாரத் மார்ட்’ என்னும் புதுமையான வர்த்தக மாதிரியை அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சீனாவின் டிராகன் மார்ட் பாணியிலான இந்த பாரத் மார்ட், அதற்கான பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

டிராகன் மார்ட் என்பது துபாயின் புறநகர்ப் பகுதியான துபாய் இன்டர்நேஷனல் சிட்டியில் இடம்பெற்றுள்ள, அருகருகே அமைந்த இரு வணிக வளாகங்களின் தொகுப்பாகும். சுமார் 1.2 கிலோமீட்டர் நீளத்துக்கு விரிந்திருக்கும் இந்த வணிக வளாகம், சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே அமைந்துள்ள மிகப்பெரிய சீன சில்லறை வர்த்தக மையமாக சிறப்பு பெற்றுள்ளது.

இந்த டிராகன் மார்ட் பாணியில் இந்தியாவின் பாரத் மார்ட் வணிக வளாகமும் அமைய உள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக தளமாக செயல்படும்.

சுமார் 1 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த பாரத் மார்ட், கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் வசதிகளை ஒருங்கே கொண்டிருக்கும். கனரக இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான எளிய பொருட்கள் வரை சகலமானதையு இங்கே பெறலாம். சில்லறை விற்பனை கூடங்கள், காட்சியறைகள், அலுவலகங்கள், கிடங்குகள் மற்றும் அவசியமான உபரி வசதிகளையும் பாரத் மார்ட் கொண்டிருக்கும்.

டிராகன் மார்ட் மூலமாக சீனாவின் ஏற்றுமதியாளர்கள் பெருமளவு வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவின் கலாச்சார பின்னணியிலான தயாரிப்புகளுக்கு உலகளாவிய சந்தை இருப்பதால், இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர தயாரிப்பாளர்களும் இதில் பயன்பெறுவார்கள். இந்த வகையில் இந்தியாவின் பலவகைப்பட்ட தயாரிப்புகளுக்கு பாரத் மார்ட் ஒரு பிரம்மாண்ட விநியோக மையமாக அமையும்.

கூடுதலாக, உலகளாவிய வசதியாக டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2030-ம் ஆண்டுக்குள், பெட்ரோலியம் அல்லாத வர்த்தக இலக்கை 100 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் முடிவெடுத்துள்ளன. இதற்கு பாரத் மார்ட் பெரும் உதவிகரமாக அமையும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours