பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டும்.! சீன வெளியுறவு அமைச்சர் வலிறுத்தல்.!

Spread the love

தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம், இன்றுவரை தொடர்ந்து 18 நாட்களாக பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலால் காஸா பகுதியில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று வரும் போரில், இரு தரப்பிலிருந்தும் குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருந்தாலும் இஸ்ரேல் தனது வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இதனால் காஸா பகுதியில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலால் குறைந்தது 4,137 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, 12,065 மக்கள் காயமடைந்துள்ளனர். அதோடு காஸாவில் 1,688 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் தங்களது முழு ஆதரவையும் இஸ்ரேலுக்கு வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் எலி கோஹனுடன் தொலைபேசி உரையாடலின் போது, அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மனிதாபிமான நெருக்கடி குறித்து சீனாவின் ஆழ்ந்த கவலையை தெரிவித்ததுடன், பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து வெளியுறவு அமைச்சர் வாங் யீ வருத்தம் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது, “இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலின் அதிகரிப்பு மற்றும் மோசமான நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. மேலும் மோதலால் ஏற்பட்ட ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளது. பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து செயல்களையும் சீனா கண்டிக்கிறது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதை எதிர்க்கிறது. அனைத்து நாடுகளுக்கும் தற்காப்பு உரிமை உண்டு, ஆனால் அவை சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதித்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும்.” என்று வாங் யீ கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours