ஐக்கிய அரபு அமீரகம், கத்தாருக்கு 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று மதியம் புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று மதியம் புறப்பட்டுச் சென்றார். ஐக்கிய அரபு அமீரக பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி கத்தார் செல்ல உள்ளார்.
முன்னதாக இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அடுத்த இரண்டு நாட்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். இது இந்த நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும். பிரதமராக நான் பதவியேற்றதிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இது எனது 7-வது பயணம். இந்தப் பயணம் இந்தியா – ஐக்கிய அரபு அமீரக நட்பை வலுப்படுத்தும். எனது சகோதரர் முகமது பின் சயீத் அல் நஹ்யானை (ஐக்கிய அரபு அமீரக அதிபர்) சந்திக்க நான் ஆர்வமாக உள்ளேன்.
கத்தாரில், அமீரான மேன்மைமிகு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி உடனான சந்திப்பை ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளேன். அவரது தலைமையின் கீழ் கத்தார் தொடர்ந்து மிகப்பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் காண்கிறது. இந்தியாவும் கத்தாரும் வரலாற்று ரீதியாக நெருங்கிய மற்றும் நட்பான உறவுகளைக் கொண்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபருடனான சந்திப்பு, உலக அரசு உச்சி மாநாடு-2024-ல் கலந்துகொள்வது மற்றும் அபுதாபியில், முதல் இந்து கோயிலை திறந்து வைப்பது ஆகிய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
கடந்த 8 மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் மோடி செல்வது இது 3-வது முறையாகும். கத்தாரில் நீர் மூழ்கி கப்பலில் உளவு பார்த்ததாக 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசின் தொடர் நடவடிக்கை மூலம் அவர்கள் விடுவிக்கப்பட்டு நேற்று நாடு திரும்பினர். இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் கத்தார் பயணம் அமைந்துள்ளது.
+ There are no comments
Add yours