82 டிரோன்களைச் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

Spread the love

2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறிய 82 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘’கடந்த ஆண்டு மட்டும் டிரோன்கள் மூலம் இந்திய பகுதிகளுக்குள் வீசப்பட்ட 317 கிலோ போதைப்பொருள், 10 கிலோ வெடிபொருட்கள், 512 ஆயுதங்கள், 56 குண்டுகள், 12 ஏ.கே ரக துப்பாக்கிகள், 128 கைத்துப்பாக்கிகள், ரூ.18 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு டிரோன்கள் வாயிலாக ஆயுதங்கள், போதைப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.

பாகிஸ்தானின் டிரோன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சாப்புக்குள் டிரோன்கள் வாயிலாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அந்த மாநில போலீஸார் சிறப்பு படையை உருவாக்கி உள்ளனர். மேலும் டிரோன் விவகாரம் தொடர்பாக பஞ்சாபில் இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிரோன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள 10 மாநில போலீஸார், 3 மத்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு டிரோன்களைச் சுட்டு வீழ்த்துவது தொடர்பாக தேசிய பாதுகாப்புப் படை சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் டிரோன்களை வீழ்த்த சிறப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த துப்பாக்கிகள் மூலம் டிரோன்களை குறிவைத்து வலைகள் வீசப்படுகின்றன. வானில் பறந்து செல்லும் வலைகள், டிரோன்களின் இறக்கைகளை சுற்றி வளைத்து அவற்றைத் தரையில் விழச் செய்யப்படுகின்றன.

மேலும் ஜாமர்கள் மூலம் டிரோன்களை இயக்குவோரின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு டிரோன்கள் கீழே விழச் செய்யப்படுகின்றன. விமானப்படை ஹெலிகாப்டர்களில் டிரோன்களைச் சுட்டு வீழ்த்தும் சிறப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு டிரோன்கள் வேட்டையாடப்பட்டு வருவதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours