இம்ரான் கான் மனைவியை கைது செய்ய ஏற்பாடு… அதிகரிக்கும் நெருக்கடிகள்!

Spread the love

சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, கைது அச்சத்துக்கு ஆளாகியிருக்கும் மனைவி பஸ்ரா பிபி-யால் தனிப்பட்ட மற்றும் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்திருக்கிறது.

பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரராக உலக சாதனைகள் படைத்தபோது ஒரு பிளேபாயாக வலம் வந்தவர் இம்ரான் கான். இந்தியாவின் ஜீனத் அமன் உட்பட நாடுதோறும் அவருக்கு நெருக்கமான தோழிகள் இருந்தனர். அனைத்து கிசுகிசுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இங்கிலாந்து யூதரான ஜெமீமாவை 1995-ல் இம்ரான் மணந்தார். 9 வருடம் நீடித்த இவர்களின் மணவாழ்வில் சுலைமான், காசிம் என இரு மகன்கள் உண்டு. அவரை விவாகரத்து செய்ததும், பத்திரிக்கையாளரான ரேஹம் கானை மணந்தார் இம்ரான். ஓராண்டு மட்டுமே நீடித்த இரண்டாவது மண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது.

முதல் மனைவி ஜெமீமா உடன் இம்ரான் கான்
முதல் மனைவி ஜெமீமா உடன் இம்ரான் கான்
அதன் பின்னர் பொதுவாழ்வில் ஈடுபாடு ஆன்மிக நாட்டம் ஆகியவை காரணமாக, ஆன்மிக குருவும் சூஃபி ஞானியுமான பஸ்ரா பிபியை சந்தித்தது, இம்ரான் கான் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 2008-ல் அவரை மணந்த பின்னர் தீவிர அரசியல்வாதியாகி, அடுத்த பத்தாண்டில் பாகிஸ்தான் பிரதமராகவும் உயர்ந்தார் இம்ரான் கான். கடந்தாண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆளாகி, தனக்கு எதிரான தொடர் வழக்குகளால் தற்போது சிறையில் இருக்கிறார்.

71 வயாதாகும் இம்ரான் கானை மொத்தமாய் முடக்கும் வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை, அரசியல் எதிரிகள் சேதாரம் செய்ய முயற்சிப்பதாய் அவரது தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மனைவி பஸ்ரா பிபி இம்ரானின் ஆன்மிக குரு மட்டுமல்ல, அரசியல் ஆலோசகராவும் செயல்பட்டிருக்கிறார். ஆட்சியிலும் கட்சியிலும் இம்ரான் எடுக்கும் முயற்சிகள் பலவற்றின் பின்னணியில் பஸ்ரா இருந்திருக்கிறார். இம்ரானின் அரசியல் நகர்வுகளை ஊகிக்க முடிந்த அவரது அரசியல் எதிரிகளால், பஸ்ராவின் முடிவுகளை கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் அடுத்தடுத்து வழக்குகளை தொடுத்ததில், ஆகஸ்டில் கைதாகி சிறைவாசத்தில் இருக்கிறார் இம்ரான் கான்.

இந்த சூழலில் இன்னும் 2 மாதங்களில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வருகிறது. இதனை ஆளும்கட்சி திடமாய் எதிர்கொள்ள, ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இங்கிலாந்திலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியிருக்கிறார். ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர், சிகிச்சையின் பெயரில் வெளிநாடு சென்றதில், கொரோனா பரவலை காரணமாக்கி அங்கேயே தங்கிவிட்டார்.

பாகிஸ்தான் நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான கைது உத்தரவுக்கு கடிவாளம் போட்ட பின்னரே பாகிஸ்தானில் காலடி வைத்திருக்கிறார். ஆனபோதும் நவாஸ் தரப்புக்கு எதிராக இம்ரான் கான் கட்சியினர் தீவிரமாக இருக்கின்றனர். நாடு முழுவதும் போராட்டங்கள், பேரணிகள் நடத்தியதில் மக்கள் எழுச்சியை உசுப்பிவிட்டிருக்கும் இம்ரான் கான் கட்சியினரின் வேகம், நவாஸ் ஷெரீப் தரப்புக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

இம்ரான் கான் சிறையில் இருக்கும்போதும், அவரது கட்சி உயிர்ப்போடு இருப்பதன் பின்னணியில் இம்ரான் கான் மனைவி பஸ்ரா பிபி அடையாளம் கணப்பட்டிருக்கிறார். எனவே இம்ரானுக்கு எதிரான வழக்குகள் சிலவற்றில் சாட்சியாக வகைப்படுத்தப்பட்டிருந்த பஸ்ரா பிபி, தற்போது குற்றவாளியாக மாற்றப்பட்டிருக்கிறார். அதற்கேற்ப வலுவான ஆதாரங்களும் விசாரணை அமைப்புகள் வசம் கிடைத்திருக்கின்றன.

விரைவில் பஸ்ரா பிபி கைது செய்யப்படுவார், அவரது கட்சி தலை இல்லாத உடலமாக திண்டாடும் என காத்திருக்கின்றனர். இம்ரான் கானை தொடர்ந்து பஸ்ரா பிபியும் சிறைக்கு செல்வது தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை முடங்கவும் வாய்ப்பாகும். இந்த நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்று, இம்ரான் கான் சகாக்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தான் தேசத்தை, தற்போதைய அரசியல் நெருக்கடி மேலும் அலைக்கழித்து வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours