பிரிட்டனின் 2வது பெரிய நகரம் திவாலானதாக அறிவிப்பு !

Spread the love

பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காம், தனது திவால் நிலையை அறிவித்துள்ளது. உள்ளூர் நிர்வாகத்தின் குளறுபடியால் ஏற்பட்ட இந்த சிக்கல், இதர நகரங்களையும் பீடிக்க வாய்ப்பாகுமா என்ற கவலையில் பிரிட்டன் ஆழ்ந்துள்ளது.

சுமார் 10 வருடங்களாகவே பர்மிங்காம் நகரின் நிர்வாகம் அதன் செலவினங்களின் அடிப்படையில் தள்ளாட்டத்தை சந்தித்து வந்தது. குறிப்பாக 2010ல் சுமார் 5 ஆயிரம் பெண் ஊழியர்கள் சம ஊதியம் கேட்டு வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில் வென்றதும், அவர்களுக்கான நிதியை தீர்ப்பதும் பர்மிங்காம் நகர கவுன்சிலின் சிக்கலை அதிகரிக்கச் செய்தது.

இவற்றுடன் கடந்தாண்டு காமன்வெல்த் போட்டிகளை தாராள செலவில் நடத்தியதும் அதன் பட்ஜெட்டில் பெரிதாய் பொத்தல் விழச் செய்தது. எனவே அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகளை பர்மிங்காம் நகர கவுன்சில் ரத்து செய்தது. பிரிவு 114 என்பதன் கீழ் பர்மிங்காம் நகர கவுன்சில் நேற்று மேற்கொண்ட அறிவிப்பின் அடிப்படையில் புதிய செலவினங்களுக்கு கைவிரித்துள்ளது.

114 பிரிவின் கீழ் அடிப்படையில் திவாலானாலும், அதன் சட்டபூர்வமான கடமைகள் தொடர இருக்கின்றன. கல்வி, குழந்தைகள் மற்றும் முதியோர் சமூக பாதுகாப்பு, குப்பைகள் சேகரிப்பு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் மட்டுமே அங்கே தொடரும். அதுவும் எத்தனை மாதங்களுக்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதற்கிடையே வருடாந்திர கிறிஸ்துமஸ் சந்தை வழக்கம்போல நடக்குமா என்றும் மக்கள் ஐயம் கொண்டுள்ளனர். பிரிட்டன் அரசாங்கம் தொடர்ந்து உதவி வந்தாலும், பர்மிங்காம் கவுன்சில் முதல் பொறுப்பாளி என்பதால் தானாக முன் வந்து திவால் நிலையை அறிவித்துள்ளது.

இது இப்படியே தொடருமா, பர்மிங்காம் பாதிப்பு இதர பிரிட்டன் நகர கவுன்சில்களை தொற்றுமா, நாளடைவில் ஒட்டுமொத்தமாக தேசத்தையும் பாதிக்குமா… என்றெல்லாம் பிரிட்டன் மக்கள் கவலை அடைந்துள்ளனர். பொருளாதார மந்தநிலை பல்வேறு ஐரோப்பிய நாடுகளை ஆட்கொண்டு வருவதன் மத்தியில், பிரிட்டன் மக்களுக்கு எழுந்திருக்கும் ஐயம் மேலும் அர்த்தம் பெறுகிறது.

இதனிடையே பர்மிங்காமில் நடைபெறவிருக்கும் 2026 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகள் திட்டமிட்டபடி அங்கே நடக்குமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. பிரிட்டன் அரசின் உதவியுடனும், நிதி மற்றும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும் பர்மிங்காம் மீட்சி பெற வேண்டும் என்றும் பிரிட்டன் மக்கள் கோரி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours