நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது !

Spread the love

நடிகை மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன், 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், கடந்த 2020-ம் ஆண்டு லிப்ரா புரொடக்சன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் (39) என்பவரது அறிமுகம் கிடைத்தது.

அப்போது சினிமா தயாரிப்பில் ஈடுபட்ட ரவீந்தர், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும் அந்தத் திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும் அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

மேலும் அந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆவணங்களைக் காண்பித்தார். அதனை நம்பி 16 கோடி ரூபாயை முதலீடு செய்தேன். ஆனால், அவர் கூறியது போல் பவர் ப்ராஜெக்ட் திட்டத்தை ஆரம்பிக்காமல் ஏமாற்றியதால் தான் கொடுத்த பணத்தைத் திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு அவர் மிரட்டல் விடுத்தார் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலி ஆவணங்கள் தயார் செய்து அதை உண்மையென நம்ப வைத்து பாலாஜி கபாவிடம் 16 கோடி ரூபாய் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸர் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் அசோக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏற்கெனவே அண்ணா நகரைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவரிடம் நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் தர வேண்டும் என கூறி 20 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்று ரவீந்தர் மோசடியில் ஈடுபட்டதும், இதுகுறித்து விஜய் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ரவீந்தரிடம் விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours