கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாயமான சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ சாங்ஃபூ, அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து வந்தவர் லி சாங்ஃபூ. சீன அரசு மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய நபராக லி இருந்து வந்தார். குறிப்பாக அதிபர் ஜி ஜின்பிங்க்கு நெருக்கமானவராக லி அறியப்பட்டிருந்தார்.
ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் முன்னோடியாக இருந்து வந்த லி சாங்ஃபூவை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அந்நாடு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் லி சாங்ஃபூ திடீரென மாயமானார்.
அவரது மாயம் குறித்து அரசு தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேலும் அவரது நிலை என்னவானது என்பது குறித்தும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அமெரிக்க குழு ஒன்று பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனையில் பங்கேற்க சீனாவிற்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளது.
இந்த நிலையில் சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சிங்குவா, லி சாங்ஃபூ பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் அவர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அதில் தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதே போல் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ திடீரென மாயமான பிறகு அவரது பொறுப்பிற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இரண்டாவது நபராக லி சாங்ஃபூ மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours