சிகாகோ: ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோ நகரத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) தொடங்கியது. வரும் 22ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஜனநாயக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ். அமெரிக்கா அவரது தலைமையில் ஒரு புத்திய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது” என்று கூறினார்.
மாநாட்டில் பேசிய தற்போதைய அதிபர் ஜோ பைடன், “ட்ரம்ப் எப்போதும் புதினுக்கு தலை வணங்குவார். நான் தலைவணங்கியது இல்லை. கமலா ஹாரிஸும் தலை வணங்க மாட்டார்” என்றார். ஜோ பைடனின் பேச்சுக்கு அரங்கம் அதிர்ந்தது.
தொடர்ந்து பேசிய பராக் ஒபாமா, “அமெரிக்க அதிபர் தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும். ஆகவே வாக்காளர்கள் தாங்கள் எவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளனரோ அவர்களுக்காக உறுதியாகப் போராட வேண்டும். இதில் அமெரிக்க மக்கள் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது. இந்தத் தேர்தலை பெரிய போராட்டமாக பாவித்து மக்கள் பங்கேற்க வேண்டும். கமலா ஹாரிஸுக்கு அமெரிக்கா ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது. அதனால் அவர் இன்று அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் தனது அமெரிக்கா கொடுத்த வாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்கு வழங்க அர்ப்பணித்துள்ளார். அந்த அர்ப்பணிப்பை நாம் அங்கீகரிக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்கள் அனைவரைப் பற்றியும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் இன்று கமலாவுக்கு ஆதரவாக இயங்க தயாராகிவிட்டேன். ஜனநாயக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ். அமெரிக்கா அவரது தலைமையில் ஒரு புத்திய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது.” என்றார்.
முன்னதாக இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் உரையாற்றினார். வழக்கமாக மாநாட்டின் கடைசி நாளில்தான் அதிபர் வேட்பாளர்கள் உரையாற்றுவார்கள். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பாராத வகையில் கமலா ஹாரிஸ் முதல் நாளிலேயே மாநாட்டில் பேசியது கவனம் பெற்றது.
கமலா ஹாரிஸ் தனது உரையில், “அதிபர் ஜோ பைடனை கொண்டாடுவதன் மூலம் இந்த உரையை நான் தொடங்க விரும்புகிறேன். உங்களுடைய வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான உங்கள் வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஒவ்வொரு அடுக்குகளில் இருந்தும் மக்கள் இங்கு குவிந்துள்ளனர். இந்த நவம்பரில் நாங்கள் ஒன்றாக, முன்னேறி வருகிறோம் என்பதை ஒரே குரலில் அறிவிப்போம். நாம் எப்போதும் இதை நினைவில் கொள்வோம்: நாம் போராடினால் வெற்றி பெறுவோம்” எனப் பேசியிருந்தார்.
+ There are no comments
Add yours