பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் பல்வேறு ஆண்களுடன் இணைந்து மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 72 வயதான டொமினிக் பெலிகாட் என்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இருப்பினும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்ற ஆண்களுக்கு குறைந்தபட்ச தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணான கிசெல் பெலிகாட்டின் பிள்ளைகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த போது உலக அளவில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிசெல் பெலிகாட், துணிவின் அடையாளமாக தற்போது பார்க்கப்படுகிறார். சுமார் மூன்று மாத காலம் நடந்த இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்ட 51 பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
இந்த வழக்கில் தனது குற்றத்தை டொமினிக் பெலிகாட் ஒப்புக் கொண்டார். அதனால் அவர் ஏற்கெனவே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று தண்டனை விவரத்தை நீதிமன்றம் வெளியிட்டது. அவருடன் சேர்த்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கு மூன்று முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். இது பாதிக்கப்பட்ட கிசெல் பெலிகாட்டின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கோரிய தண்டனை காலத்தை காட்டிலும் குறைவாகும். இதில் இருவரது தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
டொமினிக் பெலிகாட் உடன் அவரது பிள்ளைகள் யாரும் பேச விரும்பவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை சிறையில் அனுபவிக்கும் வரையில் பரோல் பெற அவருக்கு தகுதி இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது? – 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனைவி கிசெல் பெலிகாட்டுக்கு மயக்க மருந்து கொடுத்து பல்வேறு ஆண்களுடன் இணைந்தும், அவர்களை கொண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் டொமினிக் பெலிகாட். இதற்காக ஆன்லைனில் ஆட்களை அவர் தேர்வு செய்துள்ளார்.
இந்த வழக்கு பிரான்ஸ் நாட்டு மக்களை கொதிப்படைய செய்தது. அதனால் அங்கு மக்கள் போராட்டம் வெடித்தது. பெண்கள் மீது ஆண்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டம் என பலரும் தெரிவித்தனர். இந்நிலையில், இது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என மனித உரிமை நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆணாதிக்கத்தை ஒடுக்கும் நேரம் இது என பாதிக்கப்பட்ட கிசெல் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.
+ There are no comments
Add yours