அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு- மாணவன் உட்பட 3 பேர் பலி

Spread the love

விஸ்கான்ஸின்: அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஸ்கான்ஸினில் உள்ள மேடிசன் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்த சிறுவன் ஒருவன் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் ஆசிரியர் ஒருவரும், சிறுவனின் சக மாணவர் ஒருவரும் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரும் சடலமாக நிகழ்விடத்தில் மீட்கப்பட்டார்.

சம்பவம் நடந்த பள்ளியில் 400 குழந்தைகள் பயின்று வந்தனர். அப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகள் வரை உள்ளன. இந்நிலையில் அங்கு சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேடிசன் நகர காவல்துறை தலைவர் ஷான் பார்னஸ் கூறுகையில், “இந்தச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். சந்தேக நபரும் இறந்தார். இரண்டு மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.” என்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நியூடவுன் முதல் உவால்டே வரை, பார்க்லேண்ட் முதல் மேடிசன் வரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் போதிய கவனம் பெறவில்லை. நாம் நமது குழந்தைகளை துப்பாக்கிக் கலாச்சாரத்திலிருந்து காக்க முடியாதது ஏற்றுக் கொள்ள முடியாதது. வகுப்பறையில் பாதுகாப்பாக உணர்வது குழந்தைகளின் உரிமை. நம் குழந்தைகள் பள்ளிகளில் வாசிப்பையும், எழுதுவதையும் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர எப்படி துப்பாக்கிச் சூட்டிலிருந்து தற்காத்துக் கொள்வது என்றல்ல. குழந்தைகளை மனரீதியாக முடக்கும், பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தும், சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் இத்தகைய வன்முறைகளை அனுமதிக்க முடியாது” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்தால் இந்த ஆண்டு மட்டும் 322 பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. 1966 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரே ஆண்டில் இத்தனை பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தது இதுவே முதன்முறையாகும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours