கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான சோமாலியாவில் தற்கொலை படையினர், பாதுகாப்புச் சோதனைச் சாவடியை நோக்கி வெடிபொருள் நிரப்பப்பட்ட டிரக்கை ஓட்டிச் சென்று பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ளனர். ஹிரான் பிராந்தியத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரில் இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் தீவிரத்தால் அருகிலுள்ள கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த மக்களை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ஹிரான் கவர்னர் அப்துல்லாஹி அகமது மாலிம் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இங்கு நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு கேவலமான செயல். இது பேரழிவாக பார்க்கப்படுகிறது. இந்த அழிவு ஏற்படுத்திய சேதம் சிறியதல்ல. இது முழு பகுதியையும் அழித்தது” என்று கூறினார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தெரிவித்த காவல்துறை, “குண்டுவெடிப்பை நடத்தியது யார் என்பது தெரியவில்லை. இதற்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. நாங்கள் 13 பேரின் உடல்களை மீட்டுள்ளோம். அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள். இந்த தாக்குதலில் காயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours