சென்னை: சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு எப்போது திரும்புவார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. அவர்களது ஒரு வார கால விண்வெளி பயணம் தற்போது சுமார் 50 நாட்களைக் கடந்துள்ளது.
இந்தச் சூழலில் அவர்கள் விண்வெளிக்கு பயணித்த போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்றவற்றுக்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் நாசா இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக நியூ மெக்சிக்கோவில் பொறியாளர்கள் தீவிர சோதனை (டெஸ்ட்) மேற்கொண்டுள்ளனர். அதில் த்ரஸ்டர்களுக்குள் அதிக வெப்பம் ஏற்படுவது சிக்கலுக்கு காரணம் என அறிந்துள்ளனர். மேலும், பூமிக்கு திரும்பும் போது ஸ்டார்லைனரை மேனுவலாக கன்ட்ரோல் செய்வது தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகளை விஞ்ஞானிகள் எடுத்துள்ளதாக தெரிகிறது.
கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்து பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது.
இருந்தும் ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்ற காரணங்களால் அவர்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், அவர்கள் பூமிக்கு திரும்புவது எப்போது என்றும் தெரியாமல் உள்ளது. அவர்கள் பயணித்த விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்களா அல்லது வேறு விண்கலத்தில் வர உள்ளார்களா என்பதும் தெரிவிக்கப்படாமல் உள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் 90 நாட்கள் வரை மட்டுமே விண்வெளியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours