ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்ட பிணைக் கைதிகளில் 6 பேரின் உடல்கள் மீட்பு

Spread the love

ஜெருசலேம்: கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்ட பிணைக்கைதிகளில் 6 பேரின் உடலை தெற்கு காசா பகுதியின் ரஃபாவில் உள்ள சுரங்கத்தில் இருந்து மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

“உயிரிழந்தவர்கள், கார்மல் கட், ஈடன் எருசலாமி, ஹெர்ஸ் கோல்ட்பெர்க் – போலின், அலெக்ஸாண்டர் லோபனோவ், அல்மோக் சருசி மற்றும் ஒரி டேனியோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. எங்களின் ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி, நாங்கள் அங்கு சென்று சேர்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஹமாஸ் படையினர் அவர்களை கொடூரமாக கொலை செய்துள்ளனர்” என்று இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரேர் அட்மிரல் டேனியல் கஹாரி தெரிவித்துள்ளார். இவர்களில் ஹெர்ஸ் கோல்ட்பெர்க் – போலின் என்பவர் இஸ்ரேலிய அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் உள்ள சுரங்கத்தில் இருந்து கைத் ஃபர்கான் அல்காதி என்ற 52 வயதான பிணையக் கைதி உயிருடன் மீட்கப்பட்ட சில நாட்களுக்கு பின்பு இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது அதிகாரிகள் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். காசாவில் பிணைக்கைதிகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அவரும் உறுதி செய்தார். பைடன் கூறுகையில், “இது போர் முடிவடையும் நேரம். ஒப்பந்தம் முடிவடையும் நிலைக்கு வந்து விட்டதாக நாங்கள் நம்புகிறோம். அவர்கள் அனைவரும் அனைத்து கொள்கைகளையும் ஒப்புக்கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு: இஸ்ரேலிய பிணைக்கைதிகள் சிலரின் உடல்களை காசாவில் தாங்கள் கண்டெடுத்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்த சிறிது நேரத்தில், ஹேஸ்ட்டேஜ் ஃபோரம் என்ற முக்கியமான தன்னார்வலர்கள் குழு ஒன்று, நெதன்யாகு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நெதன்யாகு பிணைக்கைதிகளை கைவிட்டுவிட்டார். தற்போது இதுதான் நிஜம். நாளை முதல் நாடு ஸ்தம்பிக்கும். அதற்காக தயாராகுமாறு மக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரான யார் லாபிட், நெதன்யாகு முக்கியமற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதாக குற்றம்சாட்டினார். “எங்கள் மகன்கள், மகள்கள் கைவிடப்பட்டு சிறைகளில் உயிரிழக்கின்றனர்” என்று அவர் சாடியுள்ளார்.

40,000+ உயிர்ப்பலி: அக்டோபர் 7-ம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடந்தி வரும் தாக்குதலில் 40,691 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.94,060 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலீஸ்தீன சுகாதார அமைச்சரம் தெரிவித்துள்ளது. கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தின் இஸ்லாமிய குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரைக் கொன்று, 250 பேரை பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற நிலையில் இந்தப் போர் தொடங்கியது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours