எந்தவொரு விஷயம் குறித்தும், மக்கள் சமூக வலைதளங்களில் தகவல்களை தேடுகின்றனர். இதைப் பயன்படுத்தி, பொய் தகவல்களை பரப்புவது அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில், சமூக வலைதளங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், யு டியூப் சமூக வலைதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
யு டியூப் தளத்தில் வெளியிடப்படும் சில மருத்துவக் குறிப்புகள், பொய்யாக உள்ளதாகவும், மக்களை திசை திருப்பும் வகையிலும், ஏமாற்றும் விதத்திலும் உள்ளதாக புகார்கள் வந்து உள்ளன.
‘மருத்துவர்களிடம் போக வேண்டாம்; பூண்டை சாப்பிட்டாலே போதும். ‘புற்று நோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை தேவையில்லை;
விட்டமின் சி மாத்திரைகள் சாப்பிட்டால் போதும்’ என, பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, உலக சுகாதார அமைப்பு மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைப்புகளின் நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு எதிராக உள்ள மருத்துவக் குறிப்புகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, புற்றுநோய் குறித்த பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, போலியான மற்றும் தவறான தகவல்களை தரும் பதிவுகள் நீக்கப்பட உள்ளன.
இந்த நடவடிக்கை உடனடியாக துவக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours