டெல் அவிவ்: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இன்று அல்லது அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் ஆதரவுடன் செயல்படும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் புவாட் ஷுகர் கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தார். இதற்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியா, புவாட் ஷூகர் படுகொலையால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பில் ஆயுத பயிற்சி பெற்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். சுமார் 1.20 லட்சம் ஏவுகணைகள் உள்ளன. டி55, டி72 ரக பீரங்கிகள், அதிநவீன ட்ரோன்கள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் உள்ளன. இந்த சூழலில் புவாட் ஷூகர் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் ராணுவம் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. ரஷ்யா மறைமுகமாக உதவி செய்வதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஈரான் ராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை (ஐஆர்ஜிசி) நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹமாஸ் தலைவர் ஹனியா படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இது மிக கடுமையாக இருக்கும். சரியான நேரத்தில், சரியான இடத்தில் தாக்குதல் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 5-ம் தேதி அதிகாலை அல்லது அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க உளவுத் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி இஸ்ரேல் மக்கள் முக்கிய மத நிகழ்வை அனுசரிக்க உள்ளனர். அன்றைய தினம் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரேல் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வான்வழி தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ மற்றும் சி-டோம் அமைப்புகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் போர் விமானங்கள், ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை முறியடிக்க முடியும்.
அதோடு, இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படையின் ‘ஆபிரகாம் லிங்கன்’, ‘தியோடர் ரூஸ்வெல்ட்’ உள்ளிட்ட போர்க் கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் முகாமிட்டு உள்ளன. அமெரிக்க விமானப் படை சார்பில் கூடுதல் போர் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்க ராணுவத்தின் மூத்த தளபதி மைக்கேல் குரில்லா தலைமையிலான உயர்நிலை குழு இஸ்ரேலில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஈரான் ராணுவம், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டின் ஹவுத்தி தீவிரவாதிகள், ஹமாஸ் தீவிரவாதிகள் ஒன்றிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நட்பு அரபு நாடுகள் மூலம் பலமுனை தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். குறிப்பாக 5 முனைகளில் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. எத்தகைய தாக்குதலையும் வெற்றிகரமாக முறியடிப்போம்.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் 13-ம் தேதி இஸ்ரேலை குறிவைத்து ஈரான் ராணுவம் 300 ஏவுகணைகளை வீசியது. இவை நடுவானில் அழிக்கப்பட்டன. ஈரானின் ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதேபோல இந்த முறையும் ஈரான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலின் பிரதான விமான சேவை நிறுவனமான ‘எல் அல்’ நேற்று சில விமான சேவைகளை ரத்து செய்தது. பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. லெபனானில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டினர் உடனே வெளியேறுமாறு பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இஸ்ரேல், லெபனான், ஈரானில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்திய தூதரகங்கள் அறிவுறுத்தி உள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் உள்ள யூத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இஸ்ரேலிய வீரர்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் எழும்போது ஜோர்டான் நாடு சமரச முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அயுமான் சபாடி நேற்று ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றார். ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சமரச முயற்சி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
‘ஜிபிஎஸ்’ முடக்கம் போருக்கான அறிகுறியா? – டெல் அவிவ், மத்திய இஸ்ரேல் பகுதிகளில் ஜிபிஎஸ் சேவை நேற்று முடக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 13-ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியபோதும் இஸ்ரேல் முழுவதும் ஜிபிஎஸ் சேவை முடக்கப்பட்டது. இது போருக்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறும்போது, “ஏவுகணைகள், ட்ரோன்கள் ஜிபிஎஸ் சேவை மூலமே இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்குகின்றன. ஜிபிஎஸ் சேவையை முடக்கும்போது ஏவுகணை, ட்ரோன்களால் இலக்கை கண்டறிவது கடினம். இந்த போர் உத்தியை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்துகிறது. இஸ்ரேலின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது ஜிபிஎஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது. இது போருக்கான அறிகுறியாகவே தெரிகிறது’’ என்று கூறியுள்ளனர்.
+ There are no comments
Add yours