WWE மல்யுத்த வீரரான ரே மிஸ்டீரியோ உயிரிழந்ததாக செய்தி பரவியது. ஆனால் உயிரிழந்தது ரே மிஸ்டீரியோ அல்ல அவரது உறவினரும் பயிற்சியாளருமான ரே மிஸ்டீரியோ சீனியர் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. பெயர் குழப்பத்தில் வதந்தி பரவி வருகிறது.
WWE என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரும் பெயர் அண்டர் டேக்கர். 7 அடி உயரம் ஸ்டைலான நடை மிரட்டலான அறிமுகத்தோடு வரும் அவருக்கு ஏழு உயிர்டா என சொல்லாத 90’ஸ் கிட்ஸே இருக்க முடியாது.
அண்டர் டேக்கருக்கு அடுத்து தி ராக் எனப்படும் டுவைன் ஜான்சன், ஜான் சீனா, ரேண்டி ஆர்டன், ரோமன் ரென்ய்ண்ட்ஸ், ரே மிஸ்டீரியோ என பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் நீளும் அளவுக்கு இந்த பட்டியல் பெரிது. அவர்களில் 90’ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்தவர்களில் ரே மிஸ்டீரியோ முக்கியமானவர்.
ரே மிஸ்டீரியோ:
புய்யக்க..புய்யக்கா என 619 பாடலுடன் என்ட்ரி கொடுத்து மல்யுத்த ரிங்கில் எகிறி குதிக்கும் அவரது எண்ட்ரன்ஸ்காகவே சில்லறையை சிதற விட்ட காலங்களும் உண்டு.
மற்றவர்கள் ஒருவித இறுக்கமான முகத்துடன் எதிரிகளை மூஞ்சிலேயே குத்துவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ரே மிஸ்டீரியோவின் ஸ்டண்டுகள் 90ஸ் கிட்ஸ்களை ரசிக்க வைத்தது. தொடர்ந்து பல ஜாம்பவான்களை அடித்து புரட்டி மிரட்டியவர் ரே மிஸ்டீரியோ
ரே மிஸ்டீரியோ சீனியர்:
தற்போது அவரது மகனும் டபிள்யூ.டபிள்யூ.இ-வில் களம் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் பிரபல மல்யுத்த வீரரான ரே மிஸ்டீரியோ திடீரென காலமானதாக வெளியான தகவல் உலகெங்கும் இருக்கும் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆட்படுத்தியது.
ஆனால் உண்மையில் உயிரிழந்தது ரே மிஸ்டீரியோ அல்ல அவரது உறவினரான ரே மிஸ்டீரியோ சீனியர் பார்ப்பதற்கு இருவரும் ஒரே மாதிரி உடலமைப்புடன் குள்ளமாக முகமூடி அணிந்து இருப்பார்கள்.
ரசிகர்கள் குழப்பம்:
இதனால் ரே மிஸ்டீரியோ சீனியரின் மரணத்தையும் ஜூனியரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். உண்மையில் மரணம் அடைந்தது 66 வயது ரே மிஸ்டீரியோ சீனியர் தான். இவர் 70, 80 கால கட்டங்களில் மல்யுத்தத்தில் கலக்கியவர்.
ஆனால் 90ஸ் கிட்ஸ் ரே மிஸ்டீரியோவுக்கு 50 வயது தான் ஆகிறது. ரே மிஸ்டீரியோ சீனியரின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ் என்பதாகும். இவர் 2009 ஆம் ஆண்டு மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகி விட்டார்.
உண்மை என்ன?
தனது மாமா சீனியர் ரே மிஸ்டீரியோ பயிற்சியின் கீழ் மிக சிறந்த மல்யுத்த வீரராக உருவெடுத்த 90’ஸ் கிட்ஸ் ரே மிஸ்டீரியோ அவரது முகமூடி உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அவரது உண்மையான பெயர் ஆஸ்கார் குட்ரேஸ் ரூஃபியோ என்பதாகும்.
இருவரும் ஒரே மாதிரியாக இருப்பதால் தங்களுக்குப் பிடித்த ரே மிஸ்டீரியோ மரணம் அடைந்து விட்டதாக 90ஸ் கிட்ஸ் குழப்பம் அடைந்துள்ளனர்.
WWE இரங்கல்:
WWE கூட ரே மிஸ்டீரியோ மாமா தான் உயிரிழந்தார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ரே மிஸ்டீரியோ சீனியர் மெக்சிகோவில் லூச்சா லிபரே போட்டிகள் மூலம் புகழடைந்தவர். அதற்குப் பிறகு WWE மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றார்.
மெக்சிகோவில் 1955 ஆம் ஆண்டு பிறந்த இவர் மல்யுத்தத்திற்கு முன்னதாக குத்துச்சண்டை போட்டிகளில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours