செங்கடலில் இஸ்ரேல் சரக்கு கப்பல் கடத்தல் – ஹவுதி அமைப்பினர் அதிரடி!

Spread the love

காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக, பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஹவுதி தீவிரவாத அமைப்பினர் கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் அமைப்பினர் காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் நாட்டின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பினர் ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமான பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்கு கப்பல் ஒன்றை ஹவுதி அமைப்பினர் சிறைபிடித்துள்ளனர்.

கப்பலில் இருந்த 25 மாலுமிகளும் தற்போதைக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் வரை இது போன்ற சம்பவங்கள் தொடரும் எனவும் ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்ரேலுக்கு வன்முறை என்ற மொழி மட்டுமே புரியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹவுதி அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அப்துல் சலாம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ அலுவலகம், இந்த தாக்குதல் ஈரானின் நேரடி தீவிரவாத தாக்குதல் என விமர்சித்துள்ளது. கப்பல், இஸ்ரேலியர் பெயரில் இருந்தாலும், அதில் உள்ள மாலுமிகளில் யாரும் இஸ்ரேலியர் அல்ல எனவும், இது வெறும் துவக்கம் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளது.

கேலக்சி லீடர் என பெயரிடப்பட்டுள்ள இந்த சரக்கு கப்பல், துருக்கியில் இருந்து செங்கடல் வழியாக, இந்தியாவின் குஜராத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்தது. செங்கடலில் வந்து கொண்டிருந்த கப்பலில், ஹெலிகாப்டரில் வந்த ஹவுதி அமைப்பினர் இறங்கி அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours