ஆம் ஆத்மி எம்.பி க்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்!

Spread the love

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் முதல் ஆளாக ஜாமீன் பெற்றுள்ளார் சஞ்சய் சிங்.

கடந்த ஆண்டு அக்டோபரில் டெல்லி மதுபான கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் அரசியல் நடவடிக்கைகளைத் தொடரவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ஆம் ஆத்மி கட்சியினருக்கு ஆறுதல் அளித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கிற்கான ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதன் மூலம், டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற முதல் மூத்த ஆம் ஆத்மி தலைவர் என்ற பெருமையை சஞ்சய் சிங் பெற்றுள்ளார். இதே வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை அமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் நீதிமன்ற காவலில் உள்ளனர். மேலும், தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவும் இந்த வழக்கில் சிறையில் உள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஐ.நா வரை எதிரொலித்தது. அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஆணையிட்ட நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் பிபி வரலே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்தது. மேலும், சஞ்சய் சிங்கிடம் ஜாமீனில் இருக்கும் போது இந்த வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் நீதிபதிகள் அமர்வு, சஞ்சய் சிங் வசம் இருந்து பணம் எதுவும் மீட்கப்படவில்லை என்றும், அவர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை விசாரணையில் நிரூபிக்கலாம் என்றும் கூறியது.

அப்போது எந்தவித ஆதாரமும் இன்றி 6 மாதங்களாக சிறையில் அடைப்பதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். ஜாமீன் தொடர்பாக ஒரு நாள் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறைக்கு, முடியாது என்று கறார் காட்டியதால் ஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டனர். இந்நிலையில் சஞ்சய் சிங்குக்கு அதிரடியாக ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சின், ‘சத்யமேவ ஜெயதே’ என பதிவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours