அதிக அளவு புரதத்தை நீண்ட காலம் உட்கொள்வது எலும்பு தாது இழப்பு, சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதால், அனைத்து வயதினரும் புரதச்சத்து உடைய, ‘சப்ளிமென்ட்’ உணவுகளை தவிர்க்கும்படி ஐ.சி.எம்.ஆர்., எச்சரித்துள்ளது.
தடகள வீரர்கள், உடற் பயிற்சி செய்வோர் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் புரதச்சத்துக்காக, ‘சப்ளிமென்ட் புட்ஸ்’ எனப்படும், துணை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது.
வழிகாட்டுதல்
குறிப்பாக, ‘பவுடர்’ வடிவில் உள்ள புரத சப்ளிமென்ட் உணவுகள் அதிகம் உட்கொள்ளப்படுகின்றன.
கடந்த 2023ல் மட்டும், நம் நாட்டில் புரதம் சார்ந்த சப்ளிமென்ட் உணவுகள், 33,000 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளன.
இது ஆண்டுக்கு 15.8 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, 2032ல் 1.28 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புரத உணவுகளை உட்கொள்வது தொடர்பான வழிகாட்டுதல்களை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின், தேசிய ஊட்டச்சத்து பிரிவு கடந்த வாரம் வெளியிட்டது.
அதில், தடகள வீரர்கள் உட்பட அனைத்து தரப்பினரும், புரத சப்ளிமென்ட் உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர்., தேசிய ஊட்டச்சத்து பிரிவின் இயக்குனர் டாக்டர் ஹேமலதா கூறியதாவது:
அதிக அளவு புரதச்சத்தை நீண்ட காலத்துக்கு உட்கொள்வதால், எலும்பு தாது இழப்பு மற்றும் சீறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
எனவே, தடகள வீரர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் புரத சப்ளிமென்ட்களை பயன்படுத்தாமல், உணவின் வாயிலாக மட்டுமே தேவையான புரதச்சத்தை பெற முடியும்.
புரத பவுடர்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சமீபத்திய அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் சான்றுகளுக்கு ஏற்ப இந்த வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
+ There are no comments
Add yours