விடுமுறை நாட்களில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் பூரி செய்வீர்களா? அந்த பூரிக்கு எப்போதும் சிக்கனை வாங்கி ஒரே மாதிரி தான் கிரேவி செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி கிரேவி செய்து போரடித்துவிட்டதா?
அப்படியானால் இன்று பூரிக்கு சிக்கனை வாங்கி க்ரீன் சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இந்த சிக்கன் கிரேவி க்ரீமியாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும் இப்படி சிக்கன் கிரேவி செய்தால், கணக்கில்லாமல் பூரி வயிற்றுக்குள்ளே செல்லும். அந்த அளவில் ருசியாக இருக்கும். இந்த க்ரீன் சிக்கன் கிரேவி செய்வது மிகவும் சுலபம்.
உங்களுக்கு க்ரீன் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 1 1/2 கிலோ
- புதினா – 1 கப்
- கொத்தமல்லி – 1 கப்
- பச்சை மிளகாய் – 4
- எண்ணெய் – 1 கப்
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
- தயிர் – 200 கிராம்
- மிளகுத் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- சீரகத் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- வெள்ளை மிளகுத் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- பிரஷ் க்ரீம் – 150 மிலி
- கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
- முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நீரை தெளித்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு சூடானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
- பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
- அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 4-5 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
- பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட வேண்டும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
- பின் தயிரை சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
- பின்னர் மிளகுத் தூள், சீரகத் தூள், வெள்ளை மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
- அடுத்து பிரஷ் க்ரீம்மை சேர்த்து கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து, மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி தயார்.
+ There are no comments
Add yours