திருநெல்வேலி: அலைபேசிகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் பெண்கள் கவனமாக கையாள வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி அருகே மானூரில் மாநில மகளிர் ஆணையம், திருநெல்வேலி சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இணைந்து மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமை இன்று நடத்தின.
முகாமை தொடங்கி வைத்து மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி பேசியதாவது: “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பெண்களுக்கான சட்டங்கள் குறித்து அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்தும்போது தைரியமாக முன்வந்து புகார் செய்ய வேண்டும்.
நவீன காலத்தில் ஆன்லைன் மூலம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அலைபேசிகளையும், நவீன தொழில் நுட்பங்களையும் பெண்கள் கவனமாக கையாள வேண்டும். மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் எந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் மனநிலையோடு இருக்க வேண்டும். உங்களுக்கு எது தவறு என தென்படுகிறதோ அதை தங்களின் பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
குடும்ப பெண்களின் பிரச்சினைகளின் தீர்வு காண்பதற்கு உதவி எண் 181, குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு உதவி எண் 1098 மற்றும் முதியோர்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு உதவி எண் 14567, சைபர் க்ரைம் உதவி மையம் எண் 1930 என்ற இலவச உதவி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் அருகில் உள்ள பெண்களிடம் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும். மகளிர் ஆணையத்திற்கு குழந்தை திருமணம், பாலியல் தொடர்பான மனுக்கள், முதியோர் பிரச்சினைகள் போன்ற பல்வேறு மனுக்கள் வருகின்றன. மகளிர் ஆணையத்திற்கு வரப்படும் புகார்கள் அனைத்தும் சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மூலம் கைபெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கு நலத்திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்குமிடம், திறன் வளர்ப்பு பயிற்சி, சுயதொழில் மானியம் வழங்கப்படுகிறது” என்று ஏ.எஸ்.குமாரி கூறியுள்ளார்.
இந்நிகழ்வின் போது கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரிய விழிப்புணர்வு கையேட்டையும் அவர் வெளியிட்டார். அதை சார்பு நீதிபதி வி.முரளிதரன் பெற்றுக்கொண்டார். வழக்கறிஞர்கள் மரகத மீனா, ஷைனி பிரியா ஆகியோர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர் தாஜூன்னிசா பேகம், மானூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், துணைத் தலைவர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
+ There are no comments
Add yours