அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நெருங்கிவரும் வேளையில், அது தொடர்பான பணிகளில் பிரதமர் மோடி மூழ்கியிருக்கும் நிலையில், அவருக்கு எதிராக சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது.
குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை, 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க முன்னிறுத்தியது. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்ற மோடி, மத்திய அரசின் வரிவருவாயிலிருந்து மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் நிதியில் பெருமளவு குறைப்பதற்கு முயற்சி செய்தார் என்ற செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.
மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு எத்தனை சதவிகிதம் நிதிப் பங்கீடு வழங்க வேண்டும் என்பதை நிதி ஆணையம்தான் தீர்மானிக்கிறது. இந்த நிலையில், 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக வந்த காலக்கட்டத்தில், மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டை பெருமளவு குறைக்க வேண்டும் என்று நிதி ஆணையத்திடம் மறைமுகப் பேச்சுவார்த்தையில் மோடி ஈடுபட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதைத் தெரிவித்தவர், நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான பி.வி.ஆர்.சுப்பிரமணியம்.
தற்போது நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பி.வி.ஆர்.சுப்பிரமணியம், இதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் இணைச்செயலாளராகப் பணியாற்றினார்.
கடந்த ஆண்டு, இந்தியாவின் நிதிநிலை தொடர்பான ஒரு கருத்தரங்கத்தில் பங்கேற்ற பி.வி.ஆர்.சுப்பிரமணியம், தனது கடந்த கால அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, மாநிலங்களின் வருவாயை மத்திய அரசின் கொள்கைகள் எப்படியெல்லாம் கட்டுப்படுத்தியது என்ற விவரங்களை அவர் குறிப்பிட்டார். மேலும், ‘மாநிலங்களுக்கு 42 சதவிகித நிதியை வழங்க வேண்டுமென்ற அறிக்கை ஒன்றை 14-வது நிதிக்குழு அளித்தது. அதற்கு எதிராக மோடி பேசினார்.
மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதற்கு மறைமுகமான முயற்சியில் மோடி ஈடுபட்டார். அப்போது, நிதி ஆணையத்தின் தலைவராக ஒய்.வி.ரெட்டி இருந்தார். அவரிடம், மாநிலங்களுக்கு 42 சதவிகிதம் நிதி வழங்கக் கூடாது என்றும், 32 – 33 சதவிகிதமாக நிதியைக் குறைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அதற்கு, ஒய்.வி.ரெட்டி ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, 42 சதவிகிதம் நிதியை மாநிலங்களுக்கு வழங்க ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை மோடிக்கு ஏற்பட்டது’ என்பது உள்ளிட்ட சில விவரங்களை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வல்லுநர்களிடம் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மாநிலங்களுக்கான நிதியைக் குறைக்க முடியாது என்பதில் நிதி ஆணையம் உறுதியாக இருந்ததால், அவசர அவசரமாக மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாவும், அதில் பல நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், ‘மத்திய அரசு நிதியைக் கையாளுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதில், நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. அந்த வகையில், மத்திய அரசின் ஆளுகையின் கீழ் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் நிறைய நிதி முறைகேடுகள் நடக்கின்றன’ என்றும் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
அந்த வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய செய்தி இடம்பெற்ற காரணத்தால், அந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது. பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்த செய்திகள் குறித்து சர்வதேச செய்தியாளர்கள் நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
ஆனால், நிதியமைச்சகமோ, பிரதமர் அலுவலகமோ பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக எழுந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “14-வது நிதி கமிஷனில் பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு சட்டத்துக்கு முரணாக மாநிலங்களுக்கு சேர வேண்டிய வரி வருவாயின் பங்கினை களவாடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். மோடி அரசின் உயர்மட்ட அதிகாரி மூலம் இந்த விவகாரம் தெரியவந்தது. நிதி கமிஷன் 42 சதவீதத்தை பங்காக வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அதைக் காட்டிலும் குறைவான பங்கை வழங்கவே ஆர்வம் காட்டியுள்ளார்.
உண்மையை முற்றிலுமாக மூடி மறைக்க பல லேயர்களை கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் இந்தப் புறக்கணிப்பு அப்படியே பிரதமர் மோடி அரசின் அசல் நியதியை வெளிக்காட்டுகிறது. ஜிஎஸ்டி அறிமுகத்துக்குப் பிறகு மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது.” என குற்றம் சாட்டியுள்ளார்.
+ There are no comments
Add yours