ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரிலிருந்து கொல்கத்தாவில் உள்ள சீல்தா வரை சீல்தா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று காலை 8.30 மணி அளவில் அஜ்மீரில் பயணிகளை இறக்கிவிட்ட பிறகு, பராமரிப்பு பணிக்காக அருகே உள்ள யார்டு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்நிலையில், அஜ்மீர் – சீல்தா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் எதிர்பாராதவிதமாக தடம்புரண்டன.
இதனைக் கண்ட ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில் என்ஜின் ஓட்டுநருக்கு தகவல் அளிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அஜ்மீர் – சீல்தா விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே முதன்மை செய்தி தொடர்பாளர் கேப்டன் சஷி கிரண் கூறுகையில், “அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் தடம் புரண்டதால் மற்ற ரயில்களின் இயக்கத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
வடமேற்கு ரயில்வே-வின் ஜோத்பூர் டிவிஷனில் ராஜ்கியாவஸ் – பொமட்ரா பிரிவு இடையே இந்த ஆண்டு துவக்கத்தில் பந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் செல்லும் சூர்யநகரி விரைவு ரயில் (12480) இந்த ஆண்டு துவக்கத்தில் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours