இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 148 வது பிறந்த நாள் ஆனது இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதாவில் உள்ள ஏக்தா நகரில் இருக்கும் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த சிலை ஒற்றுமையின் சிலை என்றும், இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மாநில காவல்துறையின் அணிவகுப்பு, பெண் சிஆர்பிஎஃப் பைக்கர்களின் டேர்டெவில் ஷோ, குஜராத் மகளிர் காவல்துறையின் நடன நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதனை நேரில் பார்த்த பிரதமர் மோடி தேசிய ஒருமைப்பாட்டு தின நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசுகையில், “ஒருவகையில் மினி இந்தியாவின் வடிவம் இன்று என் முன் தெரிகிறது. மாநிலம் வேறு, மொழி வேறு, பாரம்பரியம் வேறு, ஆனால் இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இது ஒரு வலுவான ஒரு நூலுடன் இணைக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் நடந்த நிகழ்வுகள், ஜனவரி 26ம் தேதி கர்தவ்ய பாதையில் அணிவகுப்பு மற்றும் நர்மதைக் கரையில் ஒற்றுமை நாள் கொண்டாட்டங்கள் ஆகியவை தேசத்தின் முன்னேற்றத்தின் மூன்று சக்திகளாக மாறியுள்ளன. ஏக்தா நகருக்கு வரும் மக்கள் இந்த பிரமாண்ட சிலையைப் பார்ப்பது மட்டுமல்லாமல், வல்லபாய் படேலின் வாழ்க்கை, தியாகம் மற்றும் ஒரே இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் அறிவார்கள்.”
“இந்த சிலையின் கட்டுமானத்தின் கதையே ‘ஒரே இந்தியா – ஒரு சிறந்த இந்தியா’ (ஏக் பாரத் – ஸ்ரேஷ்ட பாரத்) என்கிற உணர்வை பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தில்’ கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். 140 கோடி இந்தியர்களிடையே இந்த ஒற்றுமை ஓட்டத்தைப் பார்க்கும்போது, சர்தார் வல்லபாய் படேலின் இலட்சியங்கள் ‘ஒரே இந்தியா – ஒரு சிறந்த இந்தியா’ என்ற உறுதியின் வடிவத்தில் நமக்குள் இயங்குவது போல் தெரிகிறது.” என்றார்.
மேலும், “அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு இந்த பத்தாண்டுகளில் மிக முக்கியமான 25 ஆண்டுகள். இந்த 25 ஆண்டுகளில், நம் இந்தியாவை வளமாக்க வேண்டும், நம் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். சுதந்திரத்திற்கு முன் 25 ஆண்டுகள், சுதந்திர இந்தியாவுக்காக ஒவ்வொரு நாட்டவரும் தன்னை தியாகம் செய்த காலம் இருந்தது. இப்போது, அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு ஒரு வாய்ப்பாகும், மேலும் ஒவ்வொரு இலக்கையும் அடைய சர்தார் வல்லபாய் படேலின் உத்வேகத்தைப் பெற வேண்டும்.” என்றும் பிரதமர் மோடி கூறினார்
+ There are no comments
Add yours