ஆசிரியர்கள் பயிற்சி மையம் நடத்தினால்….!

Spread the love

பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி மையம் நடத்துவது, அல்லது தனியார் பயிற்சி மையங்களில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் மாநில அரசு எச்சரித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் 12,761 தனியார் பயிற்சி மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மையங்களில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அரசு தேர்வுகளில் இந்த தனிப்பயிற்சி மையங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தேர்வின்போது பல்வேறு முறைகேடுகளும் செய்வதாக அரசுக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்த ஆண்டு தேர்வை நியாயமான முறையில் நடத்திட பீகார் அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்காக தனிப்பயிற்சி மையங்களை ஒழுங்குமுறைப்படுத்தவும், அதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணி புரிவதையும், அவர்கள் மூலம் தவறுகள் நடக்காமல் தடுக்கவும் அரசு முன்வந்துள்ளது. மாநிலத்தின் பள்ளி தேர்வு வாரிய நடைமுறை மற்றும் கோட்பாடு தேர்வுகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன. 10ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

எனவே தங்களுடைய பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வருவதை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், மாநிலத்தின் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளையும் தனியார் நிறுவனங்களில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை தலைமையகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் வகுப்புகள் எடுப்பதை கண்டறிந்தால் அவர்கள் மீது துறை ரீதியான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறு செய்யும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் யாரும் தங்கள் நிறுவனங்களில் வகுப்பு எடுக்க மாட்டார்கள் என்றும் தனியார் பயிற்சி மையங்களில் இருந்து எழுத்துப்பூர்வமாக மாவட்ட ஆட்சியருக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours