மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர் நியமனத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. மேலும், அவர்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அப்போது, அம்மாநிலத்தில் காலியாக உள்ள 24,640 பணியிடங்களுக்கு, 23 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களிலிருந்து 25,753 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.
இதில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளின் ஆசிரியர்கள், குரூப்- ‘சி’ , ‘டி’ ஊழியர்கள் பணியிடங்களும் அடங்கும். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கொல்கத்தா உயர்நீதிமனறத்தில் சிறப்பு விசாரணை அமர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி, நீதிபதிகள் டெபாங்சு பாசக், எம்.டி ஷப்பார் ரஷிதி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று பிறப்பித்த உத்தரவில், “2016ம் ஆண்டு ஆசிரியர் பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக பணியில் சேர்ந்த 25,753 ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் திரும்பி செலுத்த வேண்டும்.
இதனை வசூலிக்கும் பணிக்கு மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையம், புதிதாக ஆசிரியர் நியமன செயல்முறையைத் தொடங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் ஒருவரான சோமா தாஸ் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், மனிதாபிமான அடிப்படையில் அவர் வேலையில் தொடர நீதிமன்றம் தனது உத்தரவில் விலக்கு அளித்துள்ளது. ஆசிரியர்கள் பணிநீக்க உத்தரவை எதிர்த்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
2016ம் ஆண்டு ஆசிரியர் நியமன வழக்கில் நடந்த முறைகேடு தொடர்பாக அம்மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட திரிணமூல் தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours