மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே இரண்டு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அவரது கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியின் வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதிலும், பிரச்சாரத்தைத் தொடங்குவதிலும் மும்முரமாக உள்ளன.
ஆந்திராவைப் பொறுத்தவரை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களைச் சந்தித்திருந்தார். ஆனாலும், அந்த கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவும் கூட்டணி அமைத்துள்ளன.
இரண்டு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற கூட்டணிப் பேச்சு வார்த்தைகளின் முடிவாக தெலுங்கு தேசம் கட்சி 151 இடங்களிலும், ஜனசேனா 24 இடங்களிலும் போட்டியிடுவது என முடிவானது. அதையடுத்து தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் இணைந்து முதல்கட்டமாக 118 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 94 வேட்பாளர்களும், ஜன சேனா சார்பில் 24 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் சந்திரபாபு நாயுடு, குப்பம் தொகுதியில் மீண்டும் களமிறங்க உள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாஜக இணைந்தால், சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 154 தொகுதிகளில் இருந்து பிரித்து கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.
அதேபோல பாஜக வந்தவுடன் அதற்கும் சேர்த்து ஒரே கட்டமாக பேசி முடித்து மக்களவைத் தொகுதிகளுக்கான உடன்பாட்டை செய்து கொள்ளவும் என முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
+ There are no comments
Add yours