டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிவது ஏன் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி மதுபான கடைகள் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சார்பில் இதுவரை 5 சம்மன்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மீனாட்சி லெகி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. சுமார் 12 மணி நேரம் புலனாய்வு துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு மோடி பதில் அளித்தார்.
தற்போது டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிந்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி போன்று விசாரணையை அவர் நேரில் சந்திக்க வேண்டும். ஆனால் கேஜ்ரிவால் நாடகமாடி வருகிறார்.
ஆம் ஆத்மி அரசின் அடுத்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெல்லி குடிநீர் வாரிய நிதியில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டதிலும் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றிருக்கிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெறுகிறது.
டெல்லி ஆம் ஆத்மி அரசு விளம்பர அரசு ஆகும். ஆம் ஆத்மி தலைவர்களின் ஆட்சி, அதிகார பசி காரணமாக அவர்கள் பல்வேறு மோசடி, ஊழலில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு மீனாட்சி லெகி தெரிவித்தார்.
+ There are no comments
Add yours