இந்தியாவின் விண்வெளி இலக்குகளை இறுதி செய்தார் மோடி… 2025-ல் ககன்யான்; 2035-ல் விண்வெளி நிலையம்; 2040-ல் நிலவில் மனிதன்!

Spread the love

சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய விண்வெளி திட்டத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்களை, பிரதமர் மோடி இறுதி செய்துள்ளார்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ககன்யான் மட்டுமன்றி, விண்வெளியில் இந்தியாவின் பிரத்யேக நிலையம் மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இதன்படி, இந்தியாவின் ககன்யான் திட்டத்தை 2025-ல் செயல்படுத்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அதே போன்று இந்தியாவுக்கான பிரத்யேக விண்வெளி நிலையத்தை 2035-க்குள் அமைக்கவும், இவற்றின் தொடர்ச்சியாக 2040ல் நிலவுக்கான இந்தியர்களின் சாதனைப் பயணம் நடைபெறும் எனவும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ என்ற பெயரிலான இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது மற்றும் 2040 ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு முதல் இந்தியரை அனுப்புவது உள்ளிட்ட புதிய லட்சிய இலக்குகள் தொடர்பாக, இந்த உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனைகளை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய விண்வெளித் துறையில் சந்திரன் ஆய்வுக்கான முழுமையான திட்டத்தை உருவாக்குவது, அதன் தொடர்ச்சியான அடுத்தக்கட்ட சந்திரயான் பணிகள், என்ஜிஎல்வி எனப்படும் அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனம் மற்றும் புதிய ஏவுதளத்தை உருவாக்குதல் குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, சந்திரயான் வரிசையில் இஸ்ரோவின் சந்திரயான் 4 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours