இந்தியாவில் இதுவரையில்லாத புதிய சாதனை! – பிரதமர் மோடி

Spread the love

இந்த நிதியாண்டில் இதுவரை 41,010 காப்புரிமைகள் வழங்கி இந்திய அரசு புதிய சாதனை படைத்துள்ளது.

இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் 2023-2024ம் நிதியாண்டில் இதுவரை 41,010 காப்புரிமைகளை வாரி வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

அதில் ”இதுவரை இல்லாத வகையில் இந்த 2023-24 நிதியாண்டில் மிக அதிகமான காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு சாதனையாகும். பிரதமர் நரேந்திர மோடியின் புதுமை தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அறிவுப் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பியூஷ் கோயலின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி, “அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு மைல்கல். இந்திய இளைஞர்கள் இந்த முன்னேற்றத்தால் நிச்சயம் பயன்பெறுவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பியூஷ் கோயல் மற்றும் மோடியின் பதிவுகளை பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்கள், சமூக ஊடகங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ”இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் கடந்த 2013-14-ம் நிதியாண்டில் 4,227 காப்புரிமைகளை மட்டுமே வழங்கி இருந்தது. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, பல்வேறு திட்டங்களின் மூலம் காப்புரிமைகளை அதிகரிக்கச் செய்தார். இதன் பயனாக, இந்த நிதியாண்டில் 41 ஆயிரத்துக்கும் மேலான காப்புரிமைகளை தாண்டியிருக்கிறோம்” என்றெல்லாம் அவர்கள் சிலாகித்து வருகின்றனர்.

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு முன்னதாக வெளியிட்டிருந்த ஆண்டறிக்கையில், “கடந்த 11 ஆண்டுகளாக அதிகளவிலான காப்புரிமை விண்ணப்பங்களை இந்தியா பதிவு செய்து வருகிறது. காப்புரிமை பதிவில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளின் வளா்ச்சி விகிதத்தைவிட இந்தியாவின் வளா்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது” என தெரிவித்திருந்ததையும், இந்த பதிவுகளில் சேர்த்துப் பாராட்டி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours