இந்தியாவில் நேற்று புதிதாக 335 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,701 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையில் அறிக்கையில், உயிரிழந்தவர்களில் 4 பேர் சமீபத்தில் ஜேஎன்.1 புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்ட கேரளாவிலும், ஒருவர் மத்தியப் பிரதேசத்திலும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு 4.50 கோடியாக (4,50,04,816) உள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 4.46 கோடி பேர் (4,44,69,799) குணமாகியுள்ளனர். தேசிய அளவில் குணமடைந்தவர்களின் சதவீதம் 98.81 ஆக உள்ளது. கரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 5,33,316 உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.19% ஆக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் ஜேஎன்.1 பாதிப்பு: கேரளாவில் 78 வயதான மூதாட்டியிடம் நவம்பர் 18-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவில், அவருக்கு புதிய துணை வகையான JN.1 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு லோசன காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது என்றும், தற்போது அவர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, திருச்சியில் இருந்து அக்டோபர் 25-ம் தேதி சிங்கப்பூர் சென்ற தமிழருக்கும் JN.1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. என்றாலும், திருச்சியிலோ அல்லது தமிழகத்திலோ வேறு எங்கும் பாதிப்புகள் இல்லை. இந்தியாவில் வேறு எங்கும் JN.1 வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த மாதத்தில் சிங்கப்பூர் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு இந்த புதிய துணை வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு இப்போது கேராளவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை, இது ஒரு துணை வகை வைரஸ் தான். மக்கள் அச்சப்படத் தேவையில்லை.சூழ்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
கேரளாவில் சனிக்கிழமை ஒரே நாளில் 346 பேர் கரோனால் பாதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் 1,324 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பரிசோதனை அதிக அளவில் நடத்தப்படுவதால் பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட கோழிக்கோட்டைச் சேர்ந்த குமரன் (77) கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்கள் இறப்புக்கு வயது முதிர்வு மற்றும் இணைநோய்கள் காரணம் என்றும், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
+ There are no comments
Add yours