இந்தியா கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டி – ஃபரூக் அப்துல்லா!

Spread the love

இந்தியா கூட்டணிக்கு மற்றுமொரு பின்னடைவாக, கூட்டணித் தலைவர்களில் ஒருவரான ஃபரூக் அப்துல்லா, மக்களவையில் தேசிய மாநாட்டு கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக இன்று அறிவித்தார்.

பாஜகவுக்கு எதிராக அணி திரண்ட இந்தியா கூட்டணியின் கட்சிகள், அதன் நோக்கத்துக்கு எதிராக, பிராந்திய அளவில் ஆங்காங்கே தனித்து களம் கண்டு வருகின்றன. பாஜக மூன்றாம் முறையாக ஆட்சி அமைப்பதை தடுக்கும் நோக்கில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்த இந்தியா கூட்டணி அஸ்திவாரத்தில் ஆட்டம் கண்டுள்ளது.

இந்தியா கூட்டணிக்கு வித்திட்ட நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியிலிருந்து பாஜக கூட்டணிக்கு தாவியிருக்கிறார். மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பஞ்சாப்பின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவையும் தத்தம் மாநிலங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றன.

இந்தியா கூட்டணியின் பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ், கூட்டணி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைக்கு இணங்காததால் இந்த முடிவு எட்டப்பட்டிருப்பதாக திரிணமூல் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த வரிசையில் இந்தியா கூட்டணியின் மூத்த தலைவரான ஃபரூக் அப்துல்லா, தனது தேசிய மாநாடு கட்சி மக்களவைத் தேர்தலில் தனித்து களம் காணும் என அறிவித்துள்ளார். மக்களவையோடு சட்டப்பேரவைத் தேர்தலையும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ள ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில்சிபலின் யூடியூப் சேனலுக்கு இன்றைய தினம் அவர் அளித்த பேட்டியில், தனித்துப் போட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஃபரூக் அப்துல்லாவுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி-யான ஜெய்ராம் ரமேஷ், “ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த வரம்புகள் உள்ளன. அதற்கேற்ப முடிவுகள் எட்டப்படும். எனினும் இந்தியா கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. தேசிய மாநாட்டு கட்சியும், பிடிபியும் இந்திய கூட்டணியில் அங்கம் தொடர்ந்து அங்கம் வகிக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours