தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. ஏற்கெனவே செரியபானி என்ற கப்பல் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது
நாகையிலிருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணியர் கப்பல் போக்குவரத்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்பட்டது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செரியபானி என்ற இந்த கப்பல் சேவை இயக்கப்பட்டது. நாகையில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் ‘செரியபானி’ என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ வரை பொருட்களை தங்களுடன் கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சீதோஷ்ண நிலையை காரணம் காட்டி இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வருகின்ற மே மாதம் 13 ஆம் தேதி சிவகங்கை என்ற பெயர் கொண்ட புதிய கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளது.
பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பயணியர் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7000 ரூபாயும் வசூல் செய்யப்பட உள்ளது.
அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை பயணியர் படகு மே10 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது. இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால், இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது.
நாகை – காங்கேசன் இடையே நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவை மீண்டும் துவங்கப்பட உள்ளதால், சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
+ There are no comments
Add yours