உண்மையான எண்ணம் தெளிவாக தெரிகிறது… ஜார்கண்ட் அமைச்சர்!

Spread the love

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக செயல்பட்டு வந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அக்கட்சியின் அமைச்சர் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து புதன்கிழமை இரவு உரிமை கோரினார். ஆளுநர் தரப்பில் இருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வராத சூழலில் எம்.எல்.ஏ.க்கள், மாற்றுக் கட்சியினரின் குதிரை பேர வலையில் சிக்காமல் இருக்க அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குழுமி உள்ளனர்.

மாற்றுக் கட்சியினரின் குதிரை பேரம் மற்றும் மிரட்டல் போன்றவற்றை தவிர்க்க ஜேஎம்எம் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத் செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்கு இரண்டு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தொடர்ந்து ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். இந்த சூழலில் மோசமான வானிலை காரணமாக அவர்களது விமான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பனிப்பொழிவு இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பேருந்து மூலம் ஹைதராபாத் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

“மோசமான வானிலை காரணமாக நாங்கள் செல்ல முடியவில்லை. பாஜக-வுக்கு எதிராக எங்களது போராட்டம் தொடரும்” என அம்மாநில அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்துள்ளார்.

சம்பய் சோரன், தனக்கு ஆளும் ஜேஎம்எம் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்திருந்தார். அது தொடர்பான கடிதத்தையும் வழங்கி உள்ளதாக தகவல். இருந்தும் ஆளுநர் தரப்பில் அவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை.

“ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். இதற்காக 43 எம்.எல்.ஏ.க்கள் பேருந்தில் சென்றிருந்தனர். பிஹாரில் புதிய கூட்டணியின் ஆட்சி 5 மணி நேரத்தில் அமைந்தது. இங்கு 22 மணி நேரம் கடந்தும், கட்சியின் பிரதிநிதிகள் அனைவரும் சென்றபோதும், ஆட்சி அமைப்பது தொடர்பான தகவல் ஏதும் வழங்கப்படவில்லை. இதன் மூலம் அவர்களின் உண்மையான எண்ணம் என்ன என்பது தெளிவாக தெரிகிறது” என ஜே.எம்.எம். எம்.பி. மஹுவா மாஜி தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours