டெல்லியில் 11.7 லட்சம் பேர் குடிநீர் கட்டண பாக்கியாக ரூ.5,737 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்தாதவர்களுக்கு ஒரே முறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் திட்டம் டெல்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை அமல்படுத்தக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி தொண்டர்களிடம் முதல்வர் கேஜ்ரிவால் பேசியதாவது:
டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த பாஜகவினர் முயற்சி செய்கின்றனர். நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் குடிநீர் கட்டண பாக்கியை ஒரே முறையில் செலுத்தும் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்துகிறது. ஆனால், அதை மத்திய அரசு தடுக்கிறது. ஆம் ஆத்மி அரசின் உத்தரவுகளை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அவர்கள் மத்திய அரசை கண்டு பயப்படுகின்றனர். டெல்லியில் எப்படி சிறப்பாக ஆட்சி செய்கிறேன் என எனக்கு மட்டும்தான் தெரியும். இதற்காக எனக்கு நோபல் பரிசே வழங்க வேண்டும்.
குடிநீர் கட்டண பாக்கியை ஒரே முறையில் செலுத்தும் திட்டத்தை நிறுத்தும்படி டெல்லி துணைநிலை ஆளுநரிடம் பாஜக கூறுகிறது. குடிநீர் மசோதாவை அமைச்சரவைக்கு கொண்டு வந்தால், அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவர். மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் சிறையில் உள்ளது போல், அரசு அதிகாரிகள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பார்கள். இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்
+ There are no comments
Add yours