வரலாறு காணாத கரும்பு கொள்முதல் விலை உயர்வானது, விவசாயிகளின் நலனில் தனது அரசு கொண்டுள்ள உறுதியின் வெளிப்பாடு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடியது. இதில், 2024-25ம் ஆண்டில் அக்டோபர் முதல் தொடங்கும் பருவத்துக்கு கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.25-லிருந்து ரூ.340 வரை உயர்த்தி முடிவெடுப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ’புதிய நியாயமான மற்றும் லாபகரமான விலை (எஃப்ஆர்பி) கரும்பு விவசாயிகளின் செழிப்பை உறுதி செய்யும். இந்தியா ஏற்கெனவே உலகிலேயே கரும்புக்கு மிக உயர்ந்த விலையை கொடுக்கிறது. அதேசமயம் உள்நாட்டு நுகர்வோருக்கு உலகிலேயே மிக மலிவான விலையில் சர்க்கரையை அரசு உறுதி செய்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘மத்திய அரசின் இந்த முடிவானது கோடிக்கணக்கான கரும்பு விவசாயிகளுக்கு பயனளிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவை எடுத்துள்ள மற்ற நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ‘தேசிய கால்நடை இயக்கம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, தொழில்முனைவோருக்கு உற்சாகமான வாய்ப்புகளை வழங்குவதோடு, தீவன உற்பத்தி மற்றும் இனப் பாதுகாப்பிலும் பெரும் ஊக்கத்தை அளிக்கும். குதிரை, கழுதை, கோவேறு கழுதை மற்றும் ஒட்டக தொழில்முனைவோரை உருவாக்குவதற்காக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு 50 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும். இதன் மூலம் தேசிய கால்நடை இயக்கத்தில் அரசு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ’செயற்கைக்கோள்களுக்கான பாகங்களை தயாரிப்பதில் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான புதிய சுற்றுப்பாதை உருவாக்கப் பட்டுள்ளது. நமது அரசு விண்வெளித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை புதுப்பித்து, ஏராளமான வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours