தாங்கள் ஆட்சியமைத்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியா கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளது. இதற்கு பதிலடியாக, ‘சாதிவாரி கணக்கெடுப்பால் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகள் பறிக்கப்படும்’ என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் நாட்டின் சமூக கட்டமைப்பை நார்நாராய் கிழித்தெறிய உள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவிகித இடஒதுக்கீட்டில் 6 சதவிகிதம் சிறுபான்மை சமூகத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனால் தலித் பிரிவைச் சார்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களின் உரிமை பறிபோகும்.
இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீடு உரிமைகளை பறிக்கும் வேலைகளில் காங்கிரஸ் ஈடுபடும். எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டுமென்பதே காங்கிரஸின் நோக்கம். இதற்காக எந்த நிலைக்கும் காங்கிரஸ் செல்லும்.
நாட்டில் தலிபான்களின் நடவடிக்கைகளை செயல்படுத்தி பெண்களுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடவும் தயங்கமாட்டார்கள். ஷரியத் சட்டத்தையும், இஸ்லாமியர் தனிநபர் சட்டத்தையும் அமல்படுத்த காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல. 1947இல் இந்திய தேசம் பிரிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை போன்றே இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன்காரணமாக, பயங்கரவாதமும், தீவிரவாதமும், பிரிவினைவாதமும் நாட்டில் பரவியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours