மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறி முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் எம்.பி.யும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பியுமான டி.கே.சுரேஷ், “தென்னிந்திய மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். தென்னிந்திய மாநிலங்கள் தனியாக பிரிந்து செல்ல நேரிடும்” என கூறினார்.. காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி, ‘‘கர்நாடகாவை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. இதன்மூலம் கர்நாடகாவை தனியாக பிரிந்துசெல்ல பாஜக தூண்டுகிறது” எனவிமர்சனம் செய்தார். இதற்குஎதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் இருவரின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா தாவணகெரேவில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷும், எம்எல்ஏ வினய் குல்கர்னியும் துரோகிகள். அவர்கள் நம் தாய்நாட்டை துண்டுதுண்டாக பிரிக்க விரும்புகிறார்கள். இத்தகைய காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இதுபற்றி நானே பிரதமர் மோடியிடம் பேசுவேன்” என்றார்.
இதற்கு காங்கிரஸாரும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலர் கவிதா ரெட்டி கூறுகையில், “தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசிவரும் ஈஸ்வரப்பாவை பொதுவெளியில் அடித்துக் கொல்ல வேண்டும் என பேசி இருந்தால் போலீஸார் என்னைக் கைது செய்திருப்பார்கள். காங் கிரஸாரை கொல்ல வேண்டும் என பேசினால் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். கர்நாடக போலீஸார் ஆளும் காங்கிரஸை விட பாஜகவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்” என விமர்சித்தார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறும்போது, “ஈஸ்வரப்பாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது. சர்வாதிகார மனநிலையில் அவர் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும்” என்றார்.
+ There are no comments
Add yours