கர்நாடக மாநிலம் தண்டேலி அருகே உள்ள ஹலமாடி கிராமத்தைச் சேர்ந்த சாவித்ரி தான், தனது 6 வயது மகனை முதலைகளுக்கு உணவாக்கியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வாய்பேச முடியாத சிறுவன் தொடர்பாக பெற்றோரான சாவித்ரிக்கும் – ரவிக்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதே போன்று கடந்த சனிக்கிழமை இரவும் மகன் விஷயமாக கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த சாவித்ரி, தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் வினோத்தை தூக்கிக் கொண்டு அருகே உள்ள முதலைகள் நிறைந்த கால்வாயில் வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
ஆனாலும், மனம் கேட்காத நிலையில், மகனை கால்வாயில் வீசிவிட்டு வந்ததாகவும், காப்பாற்றும்படியும் கதறி உள்ளார்.
இதையடுத்து தகவலின் பேரில் விரைந்து வந்த தீணைப்பு மீட்புக் குழுவினரும், போலீசாரும் சிறுவனை தேடும் பணியில் தீவிரம் காட்டினர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறுவனின் உடல் பாகங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் சோகத்தில் உறைந்தனர்.
சிறுவனின் உடலில் பல இடங்களை முதலைகள் கடித்துக் குதறியிருந்ததாகவும் ஒரு கை துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் சிறுவனின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவனை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொடூர மனம் கொண்ட தாய் உள்பட பெற்றோர் இருவரையும் கைது செய்தனர்.
+ There are no comments
Add yours